Published : 09 Sep 2021 03:15 AM
Last Updated : 09 Sep 2021 03:15 AM

நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய - நாட்டுப்புற கலைஞர்களுக்கு அழைப்பு :

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு வாரிய செயலாளர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் எந்தவொருநாட்டுப்புறக் கலையில் ஈடுபட்டுள்ள 18 வயது முடிவடைந்த, 60 வயது நிறைவடையாத கலைஞர்கள் ரூ.100 பதிவுக் கட்டணமாக செலுத்தி உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி 31-ம் தேதிக்குள் ரூ.10 கட்டணம் செலுத்தி உறுப்பினர் பதிவை புதுப்பித்துக்கொள்ள உரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 1,242 நாட்டுப்புற கலைஞர்கள் இதுவரை உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை ஆண்டு ஒன்றுக்கு (இரு வாரிசுகளுக்கு) ரூ.1000 முதல் ரூ.8000 வரை, திருமண நிதியுதவி (உறுப்பினர்/ மகள்/ மகன்) (இரு முறை மட்டும்) ரூ.5000, மகப்பேறு நிதியுதவி (பெண் உறுப்பினர்களுக்கு இரு முறை மட்டும்) ரூ.6,000, மூக்கு கண்ணாடி வாங்குவதற்கான உதவி(3 வருடத்துக்கு ஒருமுறை) ரூ.1,500, இயற்கை மரணம் / ஈமச்சடங்குக்கான உதவித்தொகை ரூ.25,000, விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சம் ஆகிய உதவிகள் வழங்கப்படுகின்றன.

தற்போது செப்டம்பர் 1 முதல்தமிழக அரசால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது குழந்தைகள் பயின்று வரும் கல்வி நிறுவனங்களிடம் இருந்து படிப்புச்சான்றிதழ்கள் மட்டுமே பெற்று கல்வி ஊக்கத் தொகை பெற உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டு வரும் சுமார் 3,000 கலைஞர்களுக்கு மேல் இருந்தும், இதுவரை குறைந்த எண்ணிக்கையில் தான் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இதுவரை பதிவு செய்யாத நாட்டுப்புறக் கலைஞர்கள் உடனடியாக உறுப்பினர்களாக பதிவு செய்து பயன்பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் 'ஆ' குடியிருப்பு, திருநெல்வேலி - 07, தொலைபேசி எண்- 0462-2901890 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x