Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM
விநாயகர் சதுர்த்தியின்போது அரசின் விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பேசியதாவது:
வரும் 10-ம் தேதி விநாயகர்சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து விழா கொண்டாடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி இல்லை.
பொது இடங்களில் உறியடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்கள் நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் வழிமுறைகளை மீறினால்சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தனி நபர்கள் தங்கள் இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்தில் வைத்துச் செல்லலாம். இச்சிலைகளை பின்னர் முறையாக இந்து சமய அறநிலையத்துறையால் அகற்றப்படும்.இவ்வாறு ஆட்சியர் பேசினார்.
கூட்டத்தில் எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி, கோட்டாட்சியர்கள் சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), நிஷாந்த் கிருஷ்ணா (ஓசூர்), ஏடிஎஸ்பி அன்பு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகன், மாவட்டசுற்றுச்சூழல் செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கடாசலம், ஓசூர் மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் முருகேசன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், பர்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாம்கிங்ஸ்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒத்துழைக்க வேண்டுகோள்
விநாயகர் சதுர்த்தியின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக இந்து அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, எஸ்பி கலைச்செல்வன்தலைமை வகித்தார். கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தியின் போது, கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் சிலைகள் வைத்தல், ஊர்வலமாக எடுத்துச்செல்லுதல் உள்ளிட்ட செயல்களை தவிர்த்து ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், ஏடிஎஸ்பி-க்கள் அண்ணாமலை, குணசேகரன், புஷ்பராஜ் மற்றும் இந்து அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT