Published : 06 Sep 2021 03:15 AM
Last Updated : 06 Sep 2021 03:15 AM
போச்சம்பள்ளியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என சட்டப்பேரவையில் வலியுறுத் தியதாக பர்கூர் எம்எல்ஏ தெரிவித் தார்.
பர்கூர் எம்எல்ஏ டி.மதியழகன் (திமுக) நேற்று பர்கூர், போச்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் வெப்பாலம்பட்டியில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 100 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:
ஆண்டுதோறும் கர்நாடக மாநில வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைகளால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும். யானைகளால் ஏற்படும் சேதங்களுக்கு விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி-திண்டிவனம் சாலை பெரியபனகமுட்லு பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச் சுங்கச்சாவடியால் தொகரப்பள்ளி, ஐகுந்தம், ஜெகதேவி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை, கல்லாவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிருஷ்ணகிரி வரும் மக்கள் பாதிக்கப்படுவர்.
விதிமுறைகளை மீறி இப்பகுதியில் சுங்கச்சாவடி அமைப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக சட்டப் பேரவையில் வலியுறுத்தி பேசியுள்ளேன். போச்சம்பள்ளி பகுதியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும், போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வேண்டும். இருளர் இன மக்களின் பழுதான தொகுப்பு வீடுகளை அகற்றி விட்டு புதிய தொகுப்பு வீடுகள் அமைத்துத் தர வேண்டும், எண்ணேகொல்புதூர் தடுப்பணையில் இருந்து படேதலாவ் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.போச்சம்பள்ளியை மைய மாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் பேரவையில் பேசியுள்ளேன். இக்கோரிக்கைகளை நிறை வேற்றித்தர தொடர்ந்து நடவடிக்கைகள் எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் சதீஷ்குமார், திமுக மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், விவசாய அணி மாநில துணை செயலாளர் வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, ஊராட்சித் தலைவர் சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT