Published : 05 Sep 2021 03:15 AM
Last Updated : 05 Sep 2021 03:15 AM
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், திருப்பூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் பெருமாநல்லூர் சாலை நெசவாளர் காலனியில்செயல்பட்டு வரும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 350-க்கும் மேற்பட்ட 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
கடந்த 1-ம் தேதி முதல் சுழற்சி அடிப்படையில் மாணவர்கள் வந்துசெல்கின்றனர். இந்நிலையில், 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு தமிழாசிரியையாக பணியாற்றி வரும் 34 வயதுடைய பெண், கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி அவதிப்பட்டு வந்தார்.
கடந்த 31-ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு வந்து பள்ளி திறப்புக்கான பணிகளை மேற் கொண்டார். தொடர்ந்து 1-ம் தேதி பள்ளி திறப்பு நாளன்றும் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது உடல்நிலை மோசம் அடைந்ததால், அவருடன் பணியாற்றிய சக ஆசிரியைகள் இருவர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவருக்கு சளி (ஸ்வாப்) பரிசோதனை செய்த போது கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் சக ஆசிரியைகள் மற்றும் மாணவ - மாணவியர் அதிர்ச்சியில் உள்ளனர். அப்பள்ளி வளாகத்தில் நேற்றுகிருமிநாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளை மாநகராட்சிபணியாளர்கள் மேற்கொண்டனர்.
பள்ளியில் பணிபுரிந்த சக ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் என 28 பேருக்கு, மாநகர சுகாதாரத் துறை சார்பில் நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் கூறும் போது ‘‘ஆசிரியைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று (நேற்று) பள்ளி வழக்கம் போல திறக்கப்பட்டது,கண்டிக்கத்தக்கது.
அதேபோல தொற்று பாதித்த ஆசிரியையுடன் மருத்துவ மனைக்கு இரு ஆசிரியைகள் சென்றுள்ளனர். அவர்களும் வழக்கம் போல குழந்தைகளுக்கு பாடம் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்பட்டதாகவே கருதுகிறோம். இது மாணவ - மாணவியரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. அதேபோல தொடர் புடைய ஆசிரியை, கரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அனைத்து ஆசிரியர் - ஆசிரியைகளும் கரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT