Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM
கிருஷ்ணகிரியில் காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் நுண்கதிர் (எக்ஸ்ரே) வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பாக காசநோய் கண்டறியும் நடமாடும் நுண்கதிர் (எக்ஸ்ரே) வாகனத்தை ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மேகலசின்னம்பள்ளி, சூளகிரி, ஓசூர், தளி, கெலமங்கலம், பாரூர், சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி, வேப்பனப்பள்ளி, பர்கூர் ஆகிய பகுதிகளில் வரும் 29-ம் தேதி வரை எக்ஸ்ரே வசதியுடன் கூடிய நடமாடும் வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் டிஜிட்டல் நுண்கதிர் மூலம் சளி பரிசோதனை செய்யப்படுகிறது.
மேலும், காசநோய் கண்டறியப் பட்டால் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். அத்துடன் காசநோய் பயனாளிகளுக்கு மாதம் ரூ.500 வீதம் ஊக்கத்தொகை சிகிச்சை காலம் வரை வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிக்கு எக்ஸ்ரே வசதியுடன் கூடிய நடமாடும் வாகனம் வரும்போது தங்கள் உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நலப்பணிகள இணை இயக்குநர் பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், காசநோய் பிரிவு துணை இயக்குநர் (பொ) மருத்துவர் சுகந்தா, மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் துரைமுருகன், ஷெரீப் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT