Published : 04 Sep 2021 03:16 AM
Last Updated : 04 Sep 2021 03:16 AM
கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழையால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 4368 கனஅடி தண்ணீர் உபரி நீராக திறந்து விடப்படுகிறது.
பவானிசாகர் அணையில் 105 அடிவரை நீரினைத் தேக்கி வைக்க முடியும் என்றாலும், அணையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி இம்மாத இறுதிவரை 102 அடி வரை மட்டுமே நீரினைத் தேக்கி வைக்க முடியும்.
பவானிசாகர் அணையின் நீர் மட்டம், 30-ம் தேதி 102 அடியை எட்டியது. இதனால், பவானி ஆற்றில் உபரிநீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.
நேற்று மாலை நிலவரப்படி, பவானிசாகர் அணைக்கு விநாடிக்கு 4883 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்துக்கு 422 கனஅடியும், உபரி நீராக பவானி ஆற்றில் விநாடிக்கு 4368 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 30.31 டிஎம்சியாகவும் உள்ளது. பவானி ஆற்றில் அதிக அளவு உபரிநீர் திறக்கப்படுவதால், கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் மழை
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது. ஈரோடு நகரில் காய்கறி மார்கெட், மூலப்பட்டறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் பாதிப்பு ஏற்பட்டது. சாலைகளில் சேறும், சகதியும் தேங்கியதால் வாகனஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினர்.ஈரோட்டில் நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மி.மீட்டரில்)
குண்டேரிபள்ளம் 35, கொடுமுடி 33, மொடக்குறிச்சி 30, பவானி 24, சென்னிமலை 21, கவுந்தப்பாடி 15, அம்மாபேட்டை 14.4, வரட்டுப்பள்ளம் 14.4, ஈரோடு 11, கோபி 9.3, கொடிவேரி 9.1, பெருந்துறை 9, தாளவாடி 9, சத்தியமங்கலம் 7, நம்பியூர் 7.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT