Published : 03 Sep 2021 03:16 AM
Last Updated : 03 Sep 2021 03:16 AM
தண்டராம்பட்டு அருகே மேல் பாச்சார் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தி.மலை மாவட்டம் தண்டராம் பட்டு அடுத்த மேல்பாச்சார் கிராமத்தில் வசித்தவர் மணிவேல் மனைவி செல்வி (50). இவர், தனது வீட்டு வாசல் முன்பு நேற்று முன் தினம் அமர்ந்திருந்தார். அப்போது அவர் மீது, அதே கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் செல்வி உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தானிப்பாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செல்வி உயிரிழப்புக்கு மேல்பாச்சார் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைதான் காரணம் என கூறி தி.மலை – சேலம் நெடுஞ்சாலையில் கிராமமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதுகுறித்து தகலவறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன் றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு மறுத்த கிராம மக்கள், வட்டாட்சியர் மற்றும் டாஸ்மாக் மேலாளர் நேரில் வந்து கடையை அகற்றுவதாக உறுதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார், தண்டராம்பட்டு வட்டாட்சியர் பரிமளா ஆகியோர் நேரில் சென்று கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறும்போது, “மேல்பாச்சார் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைக்கு உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர்களில் இருந்து மதுபிரியர்கள் வந்து செல்கின்றனர். கடை அருகே குடித்துவிட்டு, வாகனங்களை வேகமாக ஓட்டிச்செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. போதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் செல்வி உயிரிழந்துள் ளார். மதுபானக் கடையால், நாங்கள் தினசரி பல்வேறு இன்னல் களை சந்தித்து வருகிறோம். எனவே, மேல்பாச்சார் கிராமத்தில் உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும்” என்றனர்.
இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், சேலம்–தி.மலை சாலையில் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT