Published : 02 Sep 2021 03:14 AM
Last Updated : 02 Sep 2021 03:14 AM
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகளில் கரோனா தடுப்பு நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 96 உயர்நிலைப் பள்ளிகள், 149 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 245 பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒரு வகுப்பில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதிகமான மாணவர்கள் வகுப்புக்கு வந்தால் பிரித்து வேறு வகுப்பில் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆன்-லைன் மூலம் மாணவர்கள் படிக்க விரும்பினால் அதற்கும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டு பள்ளிகளுக்கு வந்தனர். காஞ்சிபுரம் பி.எம்.எஸ். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு செய்தார். முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வம் உட்பட பலர் உடன் இருந்தனர்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என 593 பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
முதன்மைக் கல்வி அலுவலர் கே.ரோஸ் நிர்மலா, செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தூர் ஊராட்சி மணவாள நகர், நடேச செட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை பூக்களை தூவியும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.
அதிகமான மாணவர்கள் வகுப்புக்கு வந்தால் பிரித்து, வேறு வகுப்பில் பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆன்-லைன் மூலம் மாணவர்கள் படிக்க விரும்பினால் அதற்கும் அனுமதிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT