Published : 01 Sep 2021 03:18 AM
Last Updated : 01 Sep 2021 03:18 AM

75-வது சுதந்திர தின விழாவையொட்டி - கன்னியாகுமரி முதல் டெல்லி வரை சிஆர்பிஎப் வீரர்கள் சைக்கிள் பேரணி :

சிஆர்பிஎப் வீரர்களின் சைக்கிள் பேரணியை தருமபுரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் வழியனுப்பி வைத்தார். அடுத்தபடம்: கிருஷ்ணகிரிக்கு வந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு, எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தருமபுரி / கிருஷ்ணகிரி

கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை செல்லும் சிஆர்பிஎப் வீரர்களின் சைக்கிள் பேரணியை நேற்று தருமபுரியில் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழியனுப்பி வைத்தார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை நினைவுகூறும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎப்) வீரர்கள் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து டெல்லியில் உள்ள ராஜ்காட் பகுதி வரை சைக்கிள் பேரணி மேற்கொண்டுள்ளனர். கடந்த 22.8.21 அன்று தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பேரணி தொடங்கப்பட்டது. ‘ஆசாதி கா அம்ருத் மகா உத்ஸவ்’ என்ற தலைப்பிலான இந்த பேரணி குழுவினர் தமிழகத்தில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக பயணித்து கர்நாடகாவை அடைகின்றனர். பின்னர் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக 2,850 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, அக்.,2-ம் தேதி டெல்லி ராஜ்காட் பகுதியை சென்றடைகின்றனர்.

இந்த பேரணி குழுவினர் நேற்று முன் தினம் மாலை தருமபுரி வந்தடைந்தனர். அவர்களுக்கு தருமபுரி எம்.பி செந்தில்குமார் மேள தாளங்கள், கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளித்தார். பின்னர், நேற்று காலை தருமபுரியில் இருந்து கிளம்பிய இந்தக் குழுவினரின் பயணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தொடங்கி வைத்தார்.

அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிய காவல் கண்காணிப்பாளர், பலூன்கள் தொகுப்பை வானில் பறக்க விட்டு பேரணியை வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தருமபுரி டிஎஸ்பி அண்ணாதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி எஸ்.பி. வரவேற்றார்

டெபுடி கமாண்டன்ட் ராஜேஷ் தலைமையில், 22 சிஆர்பிஎப் வீரர்கள், நேற்று மதியம் 12 மணிக்கு கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிக்கு வந்தனர். ஓய்வு பெற்ற கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட சிஆர்பிஎப் வீரர்கள் நலச்சங்கம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் சுங்கச்சாவடியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி, வீரர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். முன்னாள் சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினர் சைக்கிள் பேரணி வீரர்களுக்கு ஆரத்தி எடுத்தனர். பின்னர் வீரர்களுக்கு எஸ்.பி. சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இவர்கள் இன்று சூளகிரியில் தங்கி நாளை காலை ஓசூர் நோக்கி செல்கின்றனர். இந்நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பி ராஜி, டிஎஸ்பி சரவணன், ஓய்வு பெற்ற சிஆர்பிஎப் எஸ்.ஐ., ரங்கநாதன், தலைமைக் காவலர் வினோத்குமார், சிவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x