Published : 31 Aug 2021 03:14 AM
Last Updated : 31 Aug 2021 03:14 AM
தூத்துக்குடி- நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல தேர்தல் கடந்த 16-ம் தேதி முதல்பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நாசரேத் சேகரத்தில் முதல்கட்ட தேர்தல் கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. இதன்மூலம் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சேகர மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக இந்தசேகரத்துக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிமற்றும் பல்வேறு நிறுவன பிரதிநிதிகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 21-ம் தேதிநடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாசரேத் சேகரத்தில் 2-ம் கட்ட தேர்தலை நடத்தாமலேயே சேகர செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான 3-ம் கட்டதேர்தலை கடந்த 28-ம் தேதி நடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, இந்த தேர்தலை ரத்து செய்து ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜா உத்தரவிட்டார். இந்நிலையில், நாசரேத் சேகரத்துக்கான 3-ம் கட்ட தேர்தலை தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடத்த திருமண்டல நிர்வாகிகள் முடிவுசெய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் தரப்பினர் வழக்கறிஞர் ஜெயக்குமார் ரூபன் தலைமையில் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-ம் கட்ட தேர்தலை நடத்திய பிறகே மூன்றாம் கட்ட தேர்தலைநடத்த வேண்டும் என கோஷமிட்டனர். அவர்களை பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்காமல் கேட்டை மூடிவிட்டதால், அவர்கள் தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் செய்த 15 பேரை போலீஸார் கைது செய்து, பின்னர் பிற்பகலில் விடுவித்தனர்.
இதற்கிடையே நாசரேத் சேகரத்துக்கான 3-ம் கட்ட தேர்தலை திருமண்டல நிர்வாகிகள் நடத்தி முடித்துவிட்டதாக தகவல் வெளியானது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT