Published : 28 Aug 2021 03:13 AM
Last Updated : 28 Aug 2021 03:13 AM
பல்லடம் அருகே கார் ஓட்டுநர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, டிஐஜி, எஸ்பி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்திலுள்ள அம்மாபாளையத்தை சேர்ந்தவர் பாக்யா(60). இவருக்கு சொந்தமாக வீரபாண்டி பகுதியிலுள்ள வீட்டில் சக்தி(எ) மகேஸ்வரன்(26) வசித்து வருகிறார். கடந்த 26-ம் தேதி தாராபுரத்தில் உள்ள மகள் வீீட்டுக்கு காரில் செல்ல பாக்யா திட்டமிட்டார். தங்களது காரை ஒட்ட, மகேஸ்வரனை பாக்யா அழைத்துள்ளார். அதன்படி, மகேஸ்வரன் காரை ஓட்டினார். பாக்யா தாராபுரத்தில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று விட்டு, அன்று மாலையே வீட்டுக்குத் திரும்பினார். பல்லடம் அருகே வந்த போது, தன் நண்பர் ஒருவரை பார்த்து விட்டு செல்லலாம் என மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வீட்டுக்குச் செல்லும் வழி என்பதால், பாக்யாவும் அனுமதித்துள்ளார். அதன்படி, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மகேஸ்வரன் சென்று கொண்டிருந்தார். பல்லடம் அருகேயுள்ள, பெரும்பாளி என்ற இடத்துக்கு அருகே கார் வந்த போது, பின்னால் 3 கார்களில் வந்த மர்ம நபர்கள், மகேஸ்வரன் ஓட்டி வந்த காரை மறித்து நிறுத்தினர்.
அந்த கார்களில் இறங்கியவர்கள், மகேஸ்வரனை மிரட்டி, தாங்கள் வந்த காரில் கடத்திச் சென்றனர். மகேஸ்வரன் கடத்தப்பட்டதால், காருடன் பாக்யா தனித்து விடப்பட்டார். அதிர்ச்சியடைந்த அவர் போலீஸாருக்கு தெரிவித்தார். சிறிது நேரத்தில் பல்லடம் போலீஸார் அங்கு வந்து பாக்யாவிடம் விசாரணை நடத்தினர். பாக்யா தெரிவித்த அடையாளங்கள் படி, மர்மநபர்கள் வந்த கார்களை பிடிக்க சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்தினர்.
மேலும், அப்பகுதிகளில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமராக்களைஆய்வு செய்தனர். போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் மகேஸ்வரனை திருப்பூர் மாவட்ட எல்லையான கீரனூரில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருப்பூர் மாவட்டம் அலங்கியம் போலீஸார், மகேஸ்வரனை மீட்டு பல்லடம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் கடத்தல் சம்பவம் குறித்தும், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் போலீஸார் விசாரித்தனர்.
தகவல் அறிந்த கோவை சரக டிஐஜி முத்துசாமி, மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோரும் பல்லடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். மகேஸ்வரன் அளித்த தகவலின் பேரில், அவரை கடத்திய நபர்கள் சிவகங்கை மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட தனிப்படைக் காவலர்கள், சிவகங்கைக்கு சென்று மூன்று பேரையும் பிடித்தனர். அவர்களை திருப்பூருக்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்த பின்னர், இவ்வழக்கில் கூடுதல் விவரங்கள் தெரியவரும் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக மாவட்ட போலீஸார் கூறும்போது, ‘‘கார் ஓட்டுநர் கடத்தப்பட்ட சம்பவம் சாதாரணமாக தெரியவில்லை. இதன் பின்னணியில் வேறு விவகாரம் இருக்கலாம் எனத் தெரிகிறது,’’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT