Published : 28 Aug 2021 03:13 AM
Last Updated : 28 Aug 2021 03:13 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தின்போது, ஒரு சில விவசாயிகளுக்கு மட்டுமே விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்என்று சிலர் வலியுறுத்தினர். இதனால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் விவசாயிகளுக்கு சுழற்சி முறையில் பேச வாய்ப்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மற்ற விவசாயிகள், தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
இக்கூட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் மையங்களில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அங்கு வியாபாரிகளின் நெல்லை எடுக்கக் கூடாது; விவசாயிகளின் நெல்லை மட்டுமே எடுக்க வேண்டும் என்று பல்வேறு விவசாயிகள் வலியுறுத்தினர்.
காஞ்சிபுரம் மரம் வளர்ப்போர் சங்கத் தலைவர் மாசிலாமணி தமிழக அரசு தனி நிதிநிலை அறிக்கையில் மாநில மரங்களான பனை மரங்களை வெட்டக் கூடாது என்றும், அவசியத் தேவை ஏற்பட்டால் ஆட்சியர் அனுமதி பெற்று வெட்டலாம் என்றும் சட்டம் கொண்டு வந்ததற்கு வரவேற்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை மூலம் விதை, உரம், பூச்சி மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நஞ்சை நிலத்தில் வீட்டுமனைகளைப் போட்டு விற்க அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் ‘உழவன் செயலியும் அதன் பயன்களும்’, ‘நுண்ணீர் பாசனம்’ உள்ளிட்ட 2 கையேடுகள் வேளாண்மைத் துறை மூலம் வெளியிடப்பட்டன. இந்தக் கையேடுகளை ஆட்சியர் வெளியிட்டார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பலருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், இணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் லட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் இதில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT