Published : 27 Aug 2021 03:12 AM
Last Updated : 27 Aug 2021 03:12 AM
திருப்பூருக்கு வேலை தேடி வரும் தொழிலாளர்கள், திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் பயிற்சி பெறலாம் என்று, ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "கரோனா காலத்தில் தொழில்துறையினர் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் வகையில், மத்திய அரசின் 'சம்ரத்' திட்டத்தை திருப்பூரில் செயல்படுத்த உள்ளோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால் கரோனா தொற்று காரணமாக திட்டத்தை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. இத்திட்டம் தொழில்துறையினர், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைகொடுக்கும்.
திருப்பூருக்கு வேலை தேடி வரும் புதிய தொழிலாளர்கள், இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்கலாம்.
ஏற்றுமதியாளர்கள் சங்கம் மூலமாக, 'சம்ரத்' திட்டத்தில் 16 ஆயிரத்து 500 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி பெறும் தொழிலாளர்கள், நிறுவனங்களில் வேலை செய்யும்போது, திறமை வாய்ந்த தொழிலாளராக முடியும். 45 நாட்கள் அளிக்கப்படும் இப்பயிற்சி காலத்தில், பயிற்சி பெறும் தொழிலாளர்களுக்கு சம்பளமும் வழங்கப்படும். இத்திட்டம் மூலமாக திருப்பூரின் தொழிலாளர்கள் பற்றாக்குறை நீங்கும். நிறுவனங்களுக்கு திறமை வாய்ந்த தொழிலாளர்களும் கிடைப்பார்கள். இந்த திட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் இணையலாம். அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. தேவைப்படும் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை 9842717950, 0421-2220500 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT