Published : 25 Aug 2021 03:17 AM
Last Updated : 25 Aug 2021 03:17 AM
கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதை அடுத்து, 17 ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக கரூர் நகர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கரூர் நகராட்சி கடந்த 1874 நவம்பர் 1-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. 146 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் தமிழகத்தின் பழமையான நகராட்சிகளில் ஒன்றாக கரூர் இருந்து வந்தது.
2004-ல் கரூர் நகராட்சியை ஒட்டியிருந்த இனாம் கரூர், தாந்தோணி பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
அப்போதிலிருந்தே கரூர் நகராட்சியுடன் இனாம் கரூர், தாந்தோணி நகராட்சிகளை இணைத்து கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுதொடர்பாக கரூர் நகர் மன்ற கூட்டங்களில் 3 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்பின், 2011-ம் ஆண்டு இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகள் மற்றும் சணப்பிரட்டி ஊராட்சி ஆகியவை கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு நகராட்சி பரப்பளவு 6.03 சதுர கிலோ மீட்டரில் இருந்து 53.26 சதுர கிலோ மீட்டராகவும், வார்டுகள் எண்ணிக்கை 48 ஆகவும் அதிகரிக்கப்பட்டன. மக்கள் தொகையும் 2.14 லட்சமாக அதிகரித்தது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக ஆட்சி அமைந்தவுடன் கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என தற்போது அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையின்போது, கரூர் மாவட்டத்தில் கரூர் நகராட்சி மாநகராட்சியாகவும், பள்ளபட்டி பேரூராட்சி நகராட்சியாகவும், புஞ்சைபுகழூர், டிஎன்பிஎல் பேரூராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு புஞ்சைபுகழூர் நகராட்சியாகவும் தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் என்ற 17 ஆண்டு கோரிக்கை நிறைவேறியுள்ளதால், மக்கள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல, புஞ்சை புகழூர், டிஎன்பிஎல் பேரூராட்சிகளை இணைத்து புஞ்சைபுகழூர் நகராட்சியாகவும், பள்ளபட்டி பேரூராட்சி நகராட்சியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதற்கும் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT