Published : 24 Aug 2021 03:14 AM
Last Updated : 24 Aug 2021 03:14 AM
சூளகிரி வட்டம் குண்டுகுறுக்கி மற்றும் நல்லகாண கொத்தப்பள்ளியில் அமைக்க உள்ள சிப்காட்டிற்கு விவசாய நிலத்தை எடுக்கக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் கோனேரிப்பள்ளி ஊராட்சி நல்லகாணகொத்தப்பள்ளி மற்றும் குண்டுகுறுக்கி கிராமங்களில், 450 வீடுகள் உள்ளன. இங்குள்ளவர்கள் அனைவரும் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். குண்டுகுறுக்கி சாலையின் மேற்கு புறத்தில் செட்டிப்பள்ளி காடு வரை எங்களுக்கு பட்டா நிலம் உள்ளது. இதில், சுமார் 150 அடியில் இருந்து 300 அடிவரை ஆழ்துளைக் கிணறு அமைத்து காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றோம். அனைத்து ஆழ்துளைக் கிணறுகளுக்கும் இலவச மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கெலவரப்பள்ளி அணை இடதுபுற வாய்க்கால் மூலம் அனைத்து நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது. வேளாண்மை துறையின் மூலம் வாய்க்கால் வசதி செய்து அனைத்து பயிர்களும் செய்து வருகின்றோம். இதில் தென்னை, மா, பலா உள்பட பல்வேறு வகையான மரங்களும் வளர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு விவசாயத்தை மட்டுமே பிரதானமாக கொண்ட நிலத்தில் சிப்காட் அமைக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவ்வாறு நிலம் எடுத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவேகுண்டுகுறுக்கி மற்றும் நல்லகாணகொத்தப்பள்ளி விவசாயிகளின் நிலத்தை சிப்காட் அமைக்க எடுக்காமல் விவசாயிகளின் குடும்பத்தை காப்பாற்ற வழிவகை செய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT