Published : 24 Aug 2021 03:14 AM
Last Updated : 24 Aug 2021 03:14 AM

கிருஷ்ணகிரி, தருமபுரியில் கனமழை :

வேப்பனப்பள்ளி பகுதியில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் ஒரு ஏக்கர் பரப்பளவில் வெற்றிலைத் தோட்டம் சேதமானது.

கிருஷ்ணகிரி / தருமபுரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு மிதமானது முதல் கனமழை பெய்தது. குறிப்பாக வேப்பனப்பள்ளி, தீர்த்தம், குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, நாச்சிகுப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்தது.

காற்றுடன் பெய்த மழைக்கு பத்தலப்பள்ளி கிராமத்தில் 1 ஏக்கர் வெற்றிலை தோட்டம், 2 ஏக்கர் தக்காளி, 2 ஏக்கர் பீட்ரூட் பயிர்கள் நாசமானது.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது இப்பகுதியில் பெய்த கனமழையால் பயிர்கள் சேதமானது. தோட்டக்கலை, வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்றனர்.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மிமீ) விவரம்: கிருஷ்ணகிரி33.20, ஓசூர் 12, தேன்கனிக்கோட்டை 10.20, தளி 10, சூளகிரி 4 மிமீ மழை பதிவாகி இருந்தது.

மாரண்ட அள்ளியில் 75 மி.மீ மழை

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக மாரண்ட அள்ளி பகுதியில் 75 மி.மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் இதர பகுதிகளில் மிதமான தூறலுடன் கூடிய மழை பெய்தது. மாரண்ட அள்ளி பகுதியில் அன்று இரவு தொடர்ச்சியாக பெய்த கனமழையால் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x