Published : 22 Aug 2021 03:14 AM
Last Updated : 22 Aug 2021 03:14 AM
தொடர் இழப்புகளை சந்தித்து வரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மா விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தர சட்டப்பேரவையில் வலியுறுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாமரங்கள் உள்ளன. இதில் 3 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மா உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், மா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருகின்றனர். மா விவசாயிகளை காக்க, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதுகுறித்து மா விவசாயிகளின் கூட்டமைப்பு தலைவர் சவுந்தரராஜன் கூறும்போது, தமிழகத்திலேயே பூச்சிக்கொல்லி, உரம் விற்பனை அதிகம் நடைபெறும் மாவட்டமாக கிருஷ்ணகிரி உள்ளது. ஆனால், மா விவசாயிகள் இயற்கையின் இடர்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வறட்சி, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் மா மகசூல் பாதிக்கப்பட்டது. நிகழாண்டில் புதிய வகையாக பூச்சி தாக்குதல் இருந்தது. இதற்காக 3 முதல் 5 முறை மருந்து தெளித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டிற்கான மகசூலுக்காக மாமரங்களுக்கு உரமிடுதல், களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள இழப்பால் நாங்கள் செய்வதறியாமல் இருக்கிறோம். அண்டை மாநிலங்களில் மகசூல் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
ஆனால் தொடர் இழப்பினை சந்தித்து வரும் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும் பலனில்லை. சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், மா விவசாயிகள் நிலை குறித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தி உரிய நிவாரணம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT