Published : 22 Aug 2021 03:14 AM
Last Updated : 22 Aug 2021 03:14 AM

அரிமளம் யூக்கலிப்டஸ் காட்டில் - வாய்க்கால் அமைப்பதை தடுத்த விவசாயிகள் :

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் யூக்கலிப்டஸ் காட்டில் வனத்தோட்டக் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வாய்க்கால் அமைக்கும் பணியை விவசாயிகள் நேற்று தடுத்து நிறுத்தினர்.

அரிமளம் பகுதியில் சுமார் 8,750 ஏக்கரில் வனத்தோட்டக் கழகத்துக்கு சொந்தமான யூக்கலிப்டஸ் காடு உள்ளது. இங்கு மரங்களுக்கு இடையே மழை நீரை தேக்குவதற்காக டிராக்டர்கள் மூலம் வரிசை வரிசையாக வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைத்தால் காட்டுப் பகுதியில் இருந்து குளம், கண்மாய்களுக்கு மழைநீர் வருவது தடைபடுவதாகக் கூறி, வாய்க்கால் அமைக்கும் பணியை அரிமளம் பசுமை மீட்புக் குழுவினர் மற்றும் விவசாயிகள் நேற்று தடுத்து நிறுத்தினர். டிராக்டர்களை சிறைபிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வாய்க்கால் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அரிமளம் பசுமை மீட்புக் குழுவினர் கூறியபோது, ‘‘யூக்கலிப்டஸ் காட்டுப் பகுதியில் வாய்க்கால் மற்றும் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதால் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் அரிமளம் பகுதியில் மழை பெய்தாலும்கூட குளம், ஏரிகளுக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால், சாகுபடி பரப்பளவு படிப்படியாக குறைந்து வருவதுடன், குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது.

எனவே, காட்டில் அதிக ஆழத்துக்கு வாய்க்கால் அமைப்பதையும், தடுப்பணை அமைப்பதையும் கைவிட வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x