Published : 21 Aug 2021 07:01 AM
Last Updated : 21 Aug 2021 07:01 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மேய்க்கால் நிலத்தில் பசுந்தீவன வளர்ப்பு மற்றும் மரம் வளர்ப்பு பணிகளை ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு வருடம் முழுவதும் பசுந்தீவனம் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்தோடு மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பசந்தீவன வளர்ப்பு மற்றும் மரங்கள் வளர்க்கப்படுகிறது. இத்திட்டத்தை வேப்பனப்பள்ளி ஒன்றியம் பில்லனகுப்பம் கிராமத்தில் ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது ஆட்சியர் பேசியதாவது:
கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக மாவட்ட ஊராட்சி முகமையுடன் இணைந்து மேய்க்கால் நிலங்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் மூலம் சமன்செய்து மண்கரை அமைத்து அதில் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனம் மற்றும் தீவன மரங்கள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, நிகழாண்டில் ஓசூர் பேகேப்பள்ளி, மத்தூர் ரெட்டிப்பட்டி கிராமங்களில் தலா 5 ஏக்கர் பரப்பளவிலும், வேப்பனப்பள்ளி பில்லனகுப்பம் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பளவு என மொத்தம் 40 ஏக்கரில் செயல்படுத்தப்படுகிறது. பசுந்தீவனம் நன்றாக வளர்ந்த பிறகு பிரித்து வழங்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் மலர்விழி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன், துணை இயக்குநர் (பொ) மரியசுந்தர், உதவி இயக்குநர் அருள்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், பாலாஜி, வேளாண் அறிவியல் மைய இயக்குநர் சுந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT