Published : 20 Aug 2021 06:41 AM
Last Updated : 20 Aug 2021 06:41 AM
தி.மலை தையல் மகளிர் மேம் பாட்டு குடிசை கூட்டுறவு சங்க இயக்குநர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
தி.மலை காந்தி நகர் 6-வது தெருவில் ‘தி.மலை தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கம்’ இயங்குகிறது. சுமார் 1,800 உறுப்பினர்களை கொண்ட இச்சங்கத்தில், 800-க்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றனர். சங்கத் தலைவராக ஜெரினா, துணைத் தலைவராக பூபதி மற்றும் 5 இயக்குநர்கள் கொண்ட நிர்வாக குழு செயல்படுகிறது.
இந்நிலையில் இயக்குநராக இருந்த ஒருவர் பதவி விலகியதால், அந்த பதவிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன் முன்னிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அப் போது, 7 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் வேட்பு மனுவை திரும்ப பெற்றுள்ளார்.
இதற்கிடையில், இயக்குநராக கற்பகம் என்பவர் தேர்வு செய்யப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இயக்குநராக தேர்வு செய்யப்பட்டவர் உறுப்பினர் கிடையாது எனக்கூறி, அலுவலகம் உள்ளே சங்கத் தலைவர் ஜெரினா மற்றும் 4 இயக்குநர்கள் நேற்று முன் தினம் இரவு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், “ஆள் மாறாட்டம் மூலமாக இயக்குநர் பதவியை கைப்பற்றும் முயற்சி நடைபெற்றுள்ளது. சங்கத்தில் உறுப்பினராக இல்லாத கற்பகம் என்பவர் இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது விவரம் தவறாக குறிப்பிட்டுள்ளனர்.
அடுத்தவாரம் தேர்தல் நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 6 பேர் களத்தில் உள்ளனர். அப்படி இருக்கும்போது, இயக்குநர் பதவிக்கு ஒருவரை எவ்வாறு தேர்வு செய்ய முடியும். இதன் பின்னணியில் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகருக்கு தொடர்பு உள்ளது” என குற்றஞ்சாட்டினர். அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த் தையை தொடர்ந்து, உள்ளிருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது. இதனிடையே, இயக்குநர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ஆள் மாறாட்டம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷிடம் சங்கத் தலைவர் ஜெரினா தலைமையிலான குழுவினர் நேற்று மனு அளித்துள்ளனர்.
பின்னர் தலைவர் ஜெரினா கூறும்போது, “இயக்குநர் பதவிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் ஆள்மாறாட்டம் மற்றும் முறை கேடு குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT