Published : 19 Aug 2021 03:12 AM
Last Updated : 19 Aug 2021 03:12 AM

திருப்பூரில் பார்மலின் தெளிக்கப்பட்ட மீன்கள் பறிமுதல் : பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

திருப்பூர்

புற்றுநோய்க்கு வழிவகுக்கும் வகையில் பார்மலின் தெளிக்கப்பட்ட 5 கிலோ மீன்களை, திருப்பூரில்அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருப்பூர் நகரப் பகுதியில்மீன்கள் கெடாமல் இருப்பதற்காக, பார்மலின் என்ற நச்சு தெளிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்டஉணவு பாதுகாப்புத் துறைக்கு புகார்வந்தது. இதையடுத்து, திருப்பூர் பெருமாநல்லூர் சாலை மற்றும் பல்லடம் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அங்குள்ள ஒரு கடையில்,பார்மலின் தெளிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர். அதேபோல தென்னம்பாளையம் மீன் சந்தையில் பயன்படுத்த தகுதியற்ற நிலையில் இருந்த20 கிலோ மீன்கள் கண்டறியப்பட்டு பினாயில் ஊற்றி அளிக்கப்பட்டது. கெட்டுப்போன மற்றும்பார்மலின்கலந்த மீன்களை விற்றதாக 5 கடை உரிமையாளர்களுக்கு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006-ன் கீழ் நோட்டீஸ் வழங்கினர்.

இதுதொடர்பாக மாவட்ட உணவுப்பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு அதிக அளவில் மீன் வரத்து உள்ளது.மீன்கள்கெடாமல் இருக்க பார்மலின்தெளிக்கப்படுகிறது. இந்த மீன்களை சாப்பிடுவோருக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, தலைவலி, வயிறு எரிச்சல், உச்சகட்டமாக புற்றுநோய் ஏற்படும். இது உயிருக்கு பேராபத்தான விஷயம். மீன் வாங்கும்போது, மீனின்செதிலை திறந்து பார்க்க வேண்டும், அது இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால் அவை புதிய மீன்களாக இருக்கும். அதேசமயம் கருப்பு மற்றும் மிகவும் செந்நிறத்தில் இருந்தால் அவை பழைய மீன்களாக இருக்கும். அவற்றை புறந்தள்ளிவிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x