Published : 19 Aug 2021 03:12 AM
Last Updated : 19 Aug 2021 03:12 AM

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : செங்கை ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கரோனா தடுப்பூசி சென்று சேர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எச்.முருகேசன் ஆட்சியர் ராகுல் நாத்திடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம், திருப்போரூர், செம்பாக்கம், சிறுகுன்றம், மானாமதி இன்னும் சில பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. பெரும்பாலும் கேளம்பாக்கம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக கேளம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளொன்றுக்கு 40 முதல் 60 வயது வரைஉள்ளவர்களில் 50 பேருக்கும், 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களில் 50 பேருக்கும் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தினமும் 500 முதல் 600 பேர் வரை தடுப்பூசிக்காக வந்து காத்திருந்து திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.

சென்னை மாநகரை ஒட்டிய பகுதி என்பதால், கேளம்பாக்கம் சுகாதார நிலையத்தின் மூலம் பெரும்பாலான தடுப்பூசிகளை அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கும், தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கும் செலுத்திவிடுகின்றனர்.

குறைந்தது 100 கிராமங்கள் உள்ளடக்கிய இப்பகுதிகளில் ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, விவசாய தொழிலாளர்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்படுவதில்லை. இதனால் நாள்தோறும் கிராமப்புற மக்கள் தடுப்பூசி கிடைக்காமல் பலமுறை வந்து ஏமாற்றத்துடன் செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் இன்னும் கரோனா தொற்று பரவலாகக் காணப்படுகிறது.

ஆகையால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தடுப்பூசியை பிரித்து அனைத்து கிராம மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும். இப்பகுதியிலேயே பெரிய சுகாதார நிலையமாக இயங்கும் கேளம்பாக்கம் சுகாதார நிலையத்தில் தினமும் 500 பேருக்கு குறையாமல் தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x