Published : 18 Aug 2021 03:15 AM
Last Updated : 18 Aug 2021 03:15 AM

தூத்துக்குடியில் ‘பழங்குடியினர் பூங்கா’ : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் தீவிரம்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பேருந்து நிலையம், வாகன நிறுத்துமிடம், வணிகவளாகம், ஸ்மார்ட் சாலைகள், அறிவியல் பூங்காக்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் வஉசி கல்லூரி முன்பு பெரிய அளவிலான அறிவியல் பூங்கா அமைக்கப்படுகிறது. ரூ.6.28 கோடி மதிப்பீட்டில் இந்த வளாகத்தில் 4 வகையான பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. பொதுமக்கள், மாணவ, மாணவியர் போக்குவரத்து விதிகளை அறிந்துகொள்ளும் வகையில் ‘போக்குவரத்து பூங்கா', ‘கோளரங்கம்', 5 திணைகளான குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகியவற்றை குறிக்கும் வகையில் ‘ஐந்திணை பூங்கா' மற்றும் ‘பழங்குடியினர் பூங்கா' போன்றவை அமைக்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள முக்கிய பழங்குடியின மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக சித்தரிக்கும் வகையில் ரூ.73.32 லட்சம் செலவில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. அரசு நிறுவனமான பூம்புகார் நிறுவனம் இதை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தோடர், இருளர், பளியர் உள்ளிட்ட 12 முக்கியமான பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை, தொழில், குடியிருப்பு போன்றவற்றை சித்தரித்து இந்த பூங்கா அமைக்கப்படுகிறது. இதற்காக தத்ரூபமான சிலை கள், குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்படுகின்றன. அக்டோபர் மாதஇறுதிக்குள் அனைத்து பூங்காக்களின் பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x