Published : 16 Aug 2021 03:21 AM
Last Updated : 16 Aug 2021 03:21 AM
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றார். விழாவுக்கு, எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி முன்னிலை வகித்தார்.
கரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 210 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
மலையாண்டஹள்ளி கிரா மத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி சின்னசாமியின் வீட்டுக்குச் சென்ற ஆட்சியர் சின்னசாமியின் மனைவி வள்ளியம்மாளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ், மாவட்ட வன அலுவலர் பிரபு, திட்ட இயக்குநர் மலர்விழி, கோட்டாட்சியர் சதீஷ்குமார், மருத் துவக் கல்லூரி டீன் அசோகன், நலப்பணிகள் இணை இயக்குநர் பரமசிவன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி ஒன்றியக் குழு தலைவர் அம்சா ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரியில் கோலாகலம்
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில், ஆட்சியர் திவ்யதர்சினி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.விழாவில், சிறப்பாக பணிபுரிந்த 15 காவல்துறையினர், 51 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் உள்ளிட்ட 137 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.
சிறந்த சேவை புரிந்த தருமபுரி நகர்நல ஆரம்ப சுகாதார நிலையம், நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மாட்லாம்பட்டி துணை சுகாதார நிலையம் ஆகிய 3 சுகாதார நிலையங்களுக்கு சிறப்பு விருதுகளை ஆட்சியர் வழங்கினார்.முதவல்வர் காப்பீட்டு திட்டத்தில் சிறந்த மருத்துவமனைகளாக தேர்வு செய்யப்பட்ட தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு விருது வழங்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும், 30 பயனாளிகளுக்கு ரூ.52.53 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கலை பண்பாட்டுத் துறை சார்பில் செம்மொழி இசைத்தென்றல் கலைக் குழுவினரின் கைச்சிலம்பாட்டம், கலைநிலா கலைக் குழுவினரின் சாட்டைக் குச்சியாட்டம் நடந்தது.
விழாவில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன், முதன்மை குற்றவியல் நடுவர் ராஜேந்திரன், எஸ்பி கலைச் செல்வன், கூடுதல் ஆட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மருத்துவர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கோட்டாட்சியர்கள் சித்ரா, முத்தையன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா உட்பட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT