Published : 14 Aug 2021 03:20 AM
Last Updated : 14 Aug 2021 03:20 AM

அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுப்பவர் மீது குற்றவியல் நடவடிக்கை :

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுப்பது, வாகனங்களில் கொண்டு செல்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சாதாரணக்கற்கள், மண், கிராவல், களிமண், சரளை மண், மணல், கிரானைட் உள்ளிட்ட சிறுகனிமங்களை அரசு அனுமதியின்றி வெட்டி எடுப்பது, அனுமதியின்றி வாகனங்களில் எடுத்துச் செல்வது மற்றும் ஒரே நடைச்சீட்டை பலமுறை பயன்படுத்துவது ஆகியன குற்றம் ஆகும்.

எனவே, அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்துச் செல்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுத்திட அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் போது, கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள், கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கருவிகள், இந்த குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மற்றும் உடந்தையாக உள்ளவர்கள் மீது அலுவலரால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, குற்றவியல் நடைமுறைகள் தொடரப்படும். இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், நீதிமன்ற இறுதி உத்தரவின் பேரில் மட்டுமே கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள் மற்றும் கனிமங்களை வெட்டியெடுத்து வாகனத்தில் கொண்டு செல்லும் குற்றச் செயலுக்கு நீதிமன்றத்தால் கனிமம் மற்றும் சுரங்கம் சட்டம் 1957-ன்படி அபராதம் மற்றும் சிறைத் தண்டனை வழங்கப்படும். மேலும் கனிமக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது மாவட்ட நிர்வாகத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x