Published : 14 Aug 2021 03:21 AM
Last Updated : 14 Aug 2021 03:21 AM
திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில் வாழவந்தான் கோட்டையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முனையத்தில் நேற்று தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் கூடுதல் இயக்குநர் சித்தார்த்தன், இணை இயக்குநர் மாலதி, துணை இயக்குநர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஒத்திகையில் பெல், பாரத் பெட்ரோலியம், எச்இபிஎப், இந்தியன் ஆயில் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை ஆகியவற்றிலிருந்து தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.
தொழிற்சாலை விதிகளின்படி ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இந்த மாதிரி ஒத்திகை பயிற்சியின்போது, தீத்தடுப்பு உபகரணங்களின் செயல்பாடுகள், அவற்றை கையாளும் ஊழியர்களின் அவசரகால நிலைகளின்போது செயல்படுவதற்கான ஆயத்த நிலை ஆய்வு செய்யப்படுகின்றன.
பெட்ரோல் சேமிப்பு தொட்டி அருகில் ஒரு ஒத்திகையும், டீசல் சேமிப்பு தொட்டி அருகில் ஒரு ஒத்திகையும் என ஒரே இடத்தில் இருவேறு இடங்களில் அவசர நிலை ஏற்பட்டால், அவற்றை எதிர்கொள்வதற்கான பயிற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒத்திகையின்போது, 200 லிட்டர் தீயணைக்கும் ஃபோம் மற்றும் 30 கிலோ லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டன. இந்த ஒத்திகையின்போது, தீயணைப்பான்கள், ஃபோன் மானிட்டர்கள், ஸ்பிரிங்கிளர்கள் போன்றவை சோதிக்கப்பட்டன.
பயிற்சியில் இந்தியன் ஆயில் நிறுவன சமையல் எரிவாயு நிரப்பும் ஆலை பயன்படுத்தும் அவசரகால மீட்பு வாகனம் பயன்படுத்தப்பட்டது. இதில் உள்ள பல நவீன வசதிகளைக் கொண்டு பெட்ரோலியப் பொருட்களை சாலை வழியாக கொண்டு செல்லும்போது, ஏற்படும் பல்வேறு விதமான விபத்துகளின்போது மீட்புப் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
பாதுகாப்பு மாதிரி ஒத்திகை நிகழ்வுக்குப் பிறகு பல்வேறு தொழில்நுட்ப கருத்துகள் பகிரப்பட்டன. மேம்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்த உரிய ஆலோசனைகளை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் கே.சித்தார்த்தன் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT