Published : 14 Aug 2021 03:22 AM
Last Updated : 14 Aug 2021 03:22 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவலர்கள் : ரயில் நிலையங்களில் சோதனை அதிகரிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்ற உள்ள வேலூர் கோட்டை கொத்தளத்தில் கொடிக்கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் தூய்மைப்படுத்தி வெள்ளை அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.படம்:வி.எம்.மணிநாதன்.

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தமிழகம் முழுவதும் சுதந்திரதினத்தை முன்னிட்டு சுமார் 1 லட்சம் காவலர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். அதன்படி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமை யில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 10 துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவலர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். குறிப்பாக, பொதுமக்கள் அதிகம் கூடும் வேலூர் கோட்டை, வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் அசம்பா விதங்களை தடுக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சாலைகளில் வாகன ரோந்துப் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை

அதேபோல், காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரயில் சந்திப்புகளில் பயணிகள், பொதுமக்கள் ஆகியோர் வந்து செல்லும் பாதையைத் தவிர்த்து பிற அனைத்து பாதைகளையும் அடைத்துள்ளனர். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் கடும் சோதனைக்கு உட்படுத்துவதுடன் அவர்கள் கொண்டு வரும் பொருட்களையும் சோதனை செய்யவுள்ளனர். இதற்காக, உள்ளூர் காவல் துறையினருடன் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் இணைந்து செயல்படவுள்ளனர். அனைத்து ரயில்களிலும் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யவுள்ளனர்.

அதேபோல், தமிழக -ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தவும், நகரின் முக்கிய பகுதிகளில் இரவு நேரத்தில் வாகனத் தணிக்கையை அதிகரிக்கவுள்ளனர். காவல் துறையினரின் இந்த பாதுகாப்பு நடவடிக்கை வரும் 16-ம் தேதி வரை தொடரும் என்று காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரி விக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x