Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM
பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் வீடுகள், நிலங்களை பூட்டிவிட்டு பிரான்ஸில் நீண்ட காலம் வசிப்பதை அறிந்து போலி பத்திரம் மூலம் அபகரிப்பு செய்யும் சம்பவங்கள் புதுச்சேரியில் அவ்வப்போது நிகழ்வதுண்டு. இவ்விவகாரம் கடந்த 1996-ல் விவாதப் பொருளாகி பிரெஞ்சு நாட்டின் பாராளுமன்றம் வரை சென்றது. அதையடுத்து அபகரிப்பு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது நில அபகரிப்பு விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கள் தரப்பில் கூறுகையில், “காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக பணியாற்றும் மும்தாஜ் பேகம் என்பவருக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர் நிலம் கோவில்பத்து கிராமத்தில் இருந்தது. இந்த நிலத்தை போலி பத்திரம் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து ஒரு கும்பல் அபகரிப்பு செய்ய முயற்சித்தனர். காரைக் கால் மாவட்ட சார்-பதிவாளர் செல்லமுத்துவுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பத்திரம் பதிவு செய்யப்படாமல் நிறுத்தப்பட்டது. உண்மையான மும்தாஜ் பேகத்துக்கு தகவல் தெரிவித்தார். காரைக்கால் நகர போலீஸார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தனர். போலி ஆதார் கார்டு தயாரித்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது காரைக்கால் அன்பு நகரைச் சேர்ந்த மும்தாஜ் பேகம், போலி பத்திரம் தயாரித்தது காரைக்கால் காமராஜர் சாலையைச் சேர்ந்த மணிகண்டன், ராஜாஜி, முகமது ரியாஸ், இதன் பின்னணியில் செயல்பட்டது திமுக துணை செயலாளர் கட்டபொம்மன் என்கிற செந்தில்குமார், கோட்டுச்சேரியைச் சேர்ந்தமூர்த்தி, பெரியபேட்டையைச் சேர்ந்த அசோக் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதில் அசோக்கை தவிர மற்றவர்கள் கைது செய்யப் பட்டனர்.
இதுமட்டுமின்றி பிரெஞ்சு குடியுரிமை பெற்ற சரஸ்வதி என்பவருக்கு செருமாவிலங்கை பகுதியில் உள்ள நிலம், கோவில் பத்தில் அப்துல் மரைக்காயர் என்பவருக்கு சொந்தமான நிலமும் அபகரிக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இடங்களை போலி பத்திரம் மூலம் அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோல் பல வழக்குகளும் விசாரணையில் உள்ளன. பல அரசியல் கட்சியினர் இதன் பின்னணியில் உள்ளனர்” என்று குறிப்பிட்டனர்.
நில அபகரிப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரியுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க, அதிமுக கிழக்கு மாநிலச் செயலர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். நில அபகரிப்பு தொடர்பாக போலீஸாரிடம் விரிவான அறிக்கையை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கோரியுள் ளதாக குறிப்பிட்டார்.
இதுபற்றி அரசு உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “புதுச்சேரியில் பத்திரப்பதிவை முறைப்படுத்தவும், போலியாக பத்திரங்கள் பதிவானால் அதை ரத்து செய்ய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
பதிவாளரே விசாரணை நடத்தலாம். பத்திரம் போலி என்று தெரிந்தவுடன் போலீஸில் அவரே புகார் தரலாம். பத்திரத்தை ரத்து செய்யவும் அவருக்கு அரசு அதிகாரம் அளித்துள்ளது” என்று குறிப்பிடுகின்றனர்.
சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள இடங்களை போலி பத்திரம் மூலம் அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT