Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM
பிஏபி பாசனத்துக்குட்பட்ட ஒட்டுக்குளத்தில் இருந்து முறைகேடாக தண்ணீர் திறக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி பாசனத்துக்குட்பட்ட 4 மண்டலங்களில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதேதிட்டத்தில் பெரியகுளம், செங்குளம், ஒட்டுக்குளம் உட்பட 8 குளங்களுக்கும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதனால் குளத்தை ஒட்டிய ஆயிரக்கணக்கான நிலங்கள் பயன்பெறுகின்றன.
இத்திட்டத்தில் உள்ள ஒட்டுக்குளம், மழைக்காலங்களில் முழுகொள்ளளவை எட்டும்போது உபரி நீர் செல்வதற்காக ராஜவாய்க்கால் வழியாக தண்ணீர் திறக்கப்படும். இந்த வாய்க்கால், உடுமலை நகரம், ஏரிப்பாளையம் , குறிஞ்சேரி ஆகிய பகுதிகள் வழியாக சென்று உப்பாற்றில் கலக்கும்.
கடந்த சில மாதங்களாகவே அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் குளங்களுக்கு அதிக அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. அதனால் அனைத்து குளங்களிலும் குறைவான அளவே தண்ணீர் உள்ளது.
இந்நிலையில் ஒட்டுக்குளத்தில் இருந்து முறைகேடாக தண்ணீர் திறக்கப்படுவதாக, பாசன விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது ‘‘மழைக்காலங்களில் அல்லது முழு கொள்ளளவை எட்டிய பின்பும் உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம். தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் தற்போதைய காலகட்டத்தில், குளத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது ஏன்? ராஜவாய்க்கால் செல்லும் பாதையில் முக்கிய நபர்களுக்கு சொந்தமான நிலங்கள் பயன்பெறும் வகையில் இந்த முறைகேடு நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT