Published : 11 Aug 2021 03:17 AM
Last Updated : 11 Aug 2021 03:17 AM

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் - பர்கூர் தொகுதிக்கு தினமும் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் : அதிகாரிகளுக்கு எம்எல்ஏ அறிவுரை

பர்கூரில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏ மதியழகன் பேசினார்.

கிருஷ்ணகிரி

பர்கூர் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் என அலுவலர்களிடம் எம்எல்ஏ தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. எம்எல்ஏ டி.மதியழகன் தலைமை வகித்தார். ஒகேனக்கல் குடிநீர் திட்ட உதவி பொறியாளர்கோவிந்தப்பன் முன்னிலை வகித்தார். ஊராட்சித் தலைவர்கள், குடிநீர் ஆப்ரேட்டர்கள், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டு குடிநீர் தொடர்பான குறைகளை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ பேசியதாவது:

பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் குடிநீர் தொடர்பான புகார்கள் அதிகளவில் வருகிறது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்மூலம் தினமும் 60 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் 20 லட்சம் லிட்டர் தண்ணீர்மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. தொகுதியில் குடிநீர் பிரச்சினை நீண்டகாலமாக இருப்பதற்கு இதுவும் காரணமாக உள்ளது. பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்க தினமும் 80 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்மோட்டார் பழுது, குழாய்கள் உடைப்பு உள்ளிட்டகாரணங்களைக் கூறுவதை தவிர்த்து, கூடுதலாக மின் மோட்டார், பழுது பார்க்கும் பணிகளை போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், சரியாக செயல்படாத மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆப்ரேட்டர்களை உடனே மாற்ற வேண்டும். இன்னும் 20 நாட்களில் பர்கூர் தொகுதியில் தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், ஊராட்சித் தலைவர்கள் தங்களது ஊராட்சிக்கு நாள்தோறும் எத்தனைலிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது என்பதை மீட்டர் பொருத்தி கண்காணிக்க வேண்டும். இவ்வாறு எம்எல்ஏ பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x