Published : 10 Aug 2021 03:16 AM
Last Updated : 10 Aug 2021 03:16 AM

தமிழக பழங்குடியின மக்கள் வசதிக்காக - கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் : அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்

கோவை/உடுமலை

கோவை காரமடையை அடுத்த பரளிக்காடு சூழல் சுற்றுலா தலத்தில் காரமடை வனச்சரக அலுவலகம், நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கம் ஆகியவை சார்பில் உலக பழங்குடியினர் தின விழா நேற்று நடைபெற்றது. இதில், மானாறு, தோண்டை, பரளிக்காடு, நீராடி, பூச்சிமரத்தூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அவர்களின் குழந்தைகள் என சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு படுக்கை விரிப்புகள், குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டன. பழங்குடியினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கட்டணமில்லா தொலைபேசி சேவை

தாராபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் நலச்சங்கத்தின் சார்பில் சர்வதேச பழங்குடியினர் தினவிழா காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பழங்குடியினரின் பயன்பாட்டுக்காக கட்டணமில்லா தொலைபேசி சேவையை தொடங்கி வைத்தார்.

அமைச்சர் பேசும்போது, ‘‘தமிழகத்தில் 7.95 லட்சம் பழங்குடியின மக்கள் உள்ளனர். பழங்குடியின மாணவர்களுக்கென செயல்படும் 318 பள்ளிகளில் 23,719 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 43 விடுதிகளில் 2,132 பேரும், உண்டு உறைவிடப் பள்ளிகளில் 2,502 பேரும் தங்கி படிக்கின்றனர். பழங்குடியின மக்கள் தினத்தையொட்டி, நாவா அமைப்பின் சார்பில் 18004251576 என்ற ‘டோல் ஃப்ரீ ’ எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான உதவிகளுக்கும் தமிழகத்தில் உள்ள பழங்குடியின மக்கள் தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் பழங்குடியின நல இயக்குநர் வி.சி.ராகுல், நாவா அமைப்பின் தலைவர் ராஜலட்சுமி, கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல உடுமலை அருகே அமராவதி வனச்சரகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் கணேஷ்ராம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மலைவாழ் மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்டை தடுப்புக் காவலர்களுக்கு சீருடை, காலணிகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x