Published : 10 Aug 2021 03:17 AM
Last Updated : 10 Aug 2021 03:17 AM

ஒகேனக்கல்லில் 10 ஆயிரம் கனஅடியைக் கடந்த நீர்வரத்து :

நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஒகேனக்கல் பிரதான அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் மீண்டும் நீர்வரத்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியைக் கடந்தது.

கடந்த மாதத்தில் கர்நாடக மாநில அணைகள் நிரம்பிய நிலையில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் தமிழகத்தை நோக்கி காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. எனவே, கடந்த மாதம் 26-ம் தேதி ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடியைக் கடந்தது. பின்னர், கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.ஒகேனக்கல் காவிரியாற்றிலும் நீர்வரத்து குறையத் தொடங்கியது. கடந்த 7-ம் தேதி விநாடிக்கு 4000 கனஅடி என்ற அளவுக்கு நீர்வரத்து சரிந்தது. இதற்கிடையில், சில தினங்களுக்கு முன்பு மீண்டும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை ஒகேனக்கல் காவிரியாற்றில் விநாடிக்கு 5000 கன அடியாகவும், மாலை 6000 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 6500 கன அடியாக இருந்த நீர்வரத்து மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியைக் கடந்தது. இதனால், பிரதான அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டத் தொடங்கியுள்ளது.

கர்நாடக மாநில அணைகளில் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியைக் கடந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் இன்று (10-ம் தேதி) காலை அல்லது மாலையில் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியை எட்டும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x