Published : 10 Aug 2021 03:17 AM
Last Updated : 10 Aug 2021 03:17 AM

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்க பிரிவினர் வழக்கு :

சென்னை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கப் பிரிவினர் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2011 -2015-ல் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. இவர், திமுக வில் இணைந்ததையடுத்து நடந்து முடிந்த தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கு மின்துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக ஆட்சி யின்போது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கணேஷ் குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

முன்னதாக செந்தில் பாலாஜி யின் வீட்டில் சோதனையிட்ட மத்திய குற்றப்பிரிவு, சொத்து ஆவணங்கள், ஆபரணங்கள், வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பெறப்பட்ட சுய விவரக் குறிப்புகள் ஆகிய வற்றை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தது.

கடந்த 8-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு ஏதும் எதிர்ப்பு தெரிவிக்காததாலும், பணத்தை திருப்பி தந்து விட்டதாக குற்றம் சுமத்தியவர்கள் கூறியதாலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு முடித்து வைக்கப் பட்டது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கப் பிரிவினர் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையிலும், அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப் படையிலும் இந்த வழக்கை பதிவு செய்து இருப்பதாக அமலாக்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற 11-ம் தேதி நேரில் ஆஜராகும்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x