Published : 09 Aug 2021 03:16 AM
Last Updated : 09 Aug 2021 03:16 AM
தொழிலாளர் நலனையொட்டிய பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திருச்சி பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர், சங்க தலைவர் வி.சண்முகம் தலைமையில் திருப்பூர் - ஊத்துக்குளி சாலையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயனை நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. செயலாளர் மு.சேகர், துணைச் செயலாளர் க.துரையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மனு விவரம்: திருச்சி மாவட்டம்திருவெரும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனத்தில், நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் எனப்படும் எல்சிஎஸ் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காமல், குறைந்தபட்ச ஊதியத்தை நிர்வாகம் வழங்கி வருகிறது.
இதை மாற்றியமைக்க வலியுறுத்தி, தொழிற்சங்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் அளிக்கப்பட்டது. ஆனால், பெல் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், 850-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மிகவும் சிரமமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இஎஸ்ஐ மருத்துவமனை மூலமாக மருத்துவம் பார்க்க, எல்சிஎஸ் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனத்தில் தொழிலாளர்களை கொத்தடிமைபோல நடத்துகின்றனர். இந்த விவகாரத்தில் எல்சிஎஸ் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், பணி நிரந்தரம் செய்யவும் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மனுவை பெற்றுக்கொண்டு மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் கூறும்போது, "எந்த நிறுவனமாக இருந்தாலும், நீண்ட காலமாக பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமலும், தொழிலாளர் களுக்குரிய சலுகைகளை வழங்காமலும் இருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. பெல் நிறுவன பணியாளர்கள் கோரிக்கை தொடர்பாக விரிவான அறிக்கை தயார் செய்து, துறை சார்ந்த மத்திய அமைச்சர், பெல் நிறுவனத் தலைவர் ஆகியோரை சந்தித்து விரைவில் உரிய தீர்வு காணப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT