Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM
அடிக்கடி விபத்து நிகழும் தொப்பூர் மலைப்பாதையை சீரமைக்க மத்திய அரசு ரூ.393 கோடி மதிப்பில் திட்டம் தயாரித்துள்ளது. இப்பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தப்படும் என தரும்புரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கணவாய் பகுதியில் உள்ள கட்டமேடு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
மேலும், விபத்து நடைபெறும் போது, வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, வாகனங்கள் இந்த சாலையை கடந்து செல்ல பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
இப்பகுதியில் நடக்கும் விபத்துகளை தடுத்து எளிதான போக்குவரத்துக்கு உகந்த சாலையாக தொப்பூர் கணவாய் பகுதி சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் சங்கம், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தொப்பூர் கண வாயில் அடிக்கடி விபத்து நிகழும் பகுதியில் தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் (பாமக) ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் அவர் கூறியதாவது:
தொப்பூர் கணவாய் மலைச் சாலையை வளைவுகளற்ற, விபத்து ஏற்படுத்தாத, நேரான சாலையாக சீரமைக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தொப்பூர் மலைச் சாலையை சீரமைக்க மத்திய அரசு சார்பில் ரூ.393 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகளை தொடங்க வேண்டும். இதுதொடர்பாக, சென்னையில் உள்ள அதிகாரிகளையும், டெல்லி சென்று மத்திய தரை வழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியையும் சந்தித்து தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் நான் வலியுறுத்த உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, தொப்பூர் பாளையம் சுங்கச் சாவடி அலுவலர்கள், பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT