Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

தமிழக - கர்நாடக எல்லையிலிருந்து - ஈரோடு வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் : நாமக்கல்லில் 5 மணி வரை மட்டுமே கடைகளுக்கு அனுமதி

ஈரோடு / நாமக்கல்

கரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது இரு தவணை தடுப்பூசி போட்டதற்கான ஆவணத்துடன் வந்தால் மட்டுமே தமிழக – கர்நாடக எல்லையில் இருந்து ஈரோட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

கரோனா மூன்றாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று (9-ம் தேதி) முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக் கப்பட்டுள்ளன.

இதன்படி, ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பேக்கரி உள்ளிட்ட பிற கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும்.

உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும், 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல், டீ கடைகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர் களுக்கு மிகாமலும், ஈமச்சடங் குகளில் 20 நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ளலாம். மீன் மற்றும் இறைச்சிக் கடைகளை, திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்து பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் ஞாயிறு மட்டும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. கர்நாடகா - தமிழ்நாடு மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சோதனைச் சாவடி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பிசிஆர் சான்றிதழ் அல்லது கரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகள் செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். இல்லாவிடில், சோதனைச் சாவடியிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதி, டிவிஎஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தாவீதி, பழையசென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு உட்பட முக்கிய இடங்களில் பால், மருந்தகம், மளிகைக்கடை, காய்கறிக்கடைகள், உணவகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிறுகளில் இயங்க, முழுமையாக தடை விதிக்கப்படுகிறது, என ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் கட்டுப்பாடு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:

கரோனா மூன்றாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாமக்கல் மாவட்டத்தில் இன்று (9-ம் தேதி) காலை 6 மணி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதன்படி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் வழிபட தடை விதிக்கப்படுகிறது.

பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். மாவட்டத்திலுள்ள உணவகங்கள், தேனீர் கடைகள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப் படுகிறது.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பூங்காக்கள் மற்றும் கொல்லிமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது இரு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக காண்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமா் தாகூர், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, கோட்டாட்சியர்கள் மு.கோட்டைக்குமார், தே.இளவரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x