Published : 09 Aug 2021 03:18 AM
Last Updated : 09 Aug 2021 03:18 AM

அரசு வழங்கும் உரிமை, சலுகையை பயன்படுத்தி - சுய தொழில் தொடங்கி வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் : மூன்றாம் பாலினத்தினருக்கு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி அறிவுரை

திருப்பத்தூரில் நேற்று மூன்றாம் பாலினத்தவருக்கு கரோனா நிவாரண நிதியுதவி மற்றும் அடையாள அட்டையை வழங்கிய கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி தோத்திரிமேரி. அருகில், சிறப்பு சார்பு நீதிபதி ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர்.

திருப்பத்தூர்

அரசு வழங்கும் சலுகைகளையும், உரிமைகளையும் மூன்றாம் பாலினத்தினர் முறையாக பயன் படுத்தி சுய தொழில் தொடங்கி வாழ்க்கையில் மேன்மை அடைய வேண்டும் என கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி தோத்திரமேரி தெரிவித்தார்.

திருப்பத்தூர் வட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி தோத்திரமேரி தலைமை வகித்தார். சிறப்பு சார்பு நீதிபதி ஜெயப்பிரகாஷ், சார்பு நீதிபதி அசீன்பானு, மாவட்ட சமூக நல அலுவலர் முருகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்ட சட்டப்பணிகள் குழு வழக்கறிஞர் முருகன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூக நலத்துறை சார்பில் அடையாள அட்டைகள் மற்றும் கரோனா நிவாரண நிதியை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி தோத்திரமேரி வழங்கி பேசும்போது, ‘‘தமிழக அரசு மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அரசு வழங்கும் சலுகைகளை வெறும் உணவு தேவைக்காக எடுத்துக்கொள்ளாமல் அவற்றை பயன்படுத்தி சமுதாயத்தில் மேன்மை பெற வேண்டும்.

அரசு வழங்கும் உரிமைகளை யும், சலுகைகளையும் முறையாக பயன்படுத்தி ஏதேனும் ஒரு தொழிலை தொடங்கி சுய கவுரவத்துடன் வாழ வழி வகை செய்து கொள்ள வேண்டும்’’. என்றார்.

இதைத்தொடர்ந்து, சிறப்பு சார்பு நீதிபதி ஜெயபிரகாஷ் பேசும்போது, ‘‘ சமூகத்துடன் ஒன்றி வாழ மூன்றாம் பாலினத்தினருக்கு உரிமை உண்டு. அந்த உரிமை பறிக்கப்பட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். அங்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றங்களில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழுவின் உதவியை அணுகலாம்.

நீங்கள் வட்ட சட்டப்பணிகள் அலுவலகத்தை அணுகி உங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ளலாம். மூன்றாம் பாலினத்தினர்களுக்கான பாதுகாப்பு உரிமைகள் விதிகள் 2020-ன்படி உங்களுக்கான அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இந்த அடையாள அட்டைகளை பயன்படுத்தி அரசின் பல்வேறு சலுகைகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட தொழிற் பயிற்சி மையத்தின் மேலாளர் ரமேஷ் பேசும்போது, "வேலை இல்லாத இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு வரை படித்திருந்தால் ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. அதேபோல, பிரதமரின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் மாவட்ட தொழில் பயிற்சி மையம் 04179-299099 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’. என்றார்.

இந்நிகழ்ச்சியில், நீதித்தறை நடுவர்கள் பத்மாவதி, ரம்யா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் குமார், அரசு மருத்துவர் செந்தில்குமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் தினகரன் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x