Published : 08 Aug 2021 03:17 AM
Last Updated : 08 Aug 2021 03:17 AM
உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கையில் ஊசி சிக்கியதாக உறவினர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை ராஜ்பவன் குடியிருப்பில் வசித்துவருபவர் சுரஜ் பகதூர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சஞ்சனா (28). சஞ்சனா 2-வது பிரசவத்துக்காக கடந்த 30-ம் தேதி உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் இருந்துவீடு திரும்புவதற்காக சஞ்சனாவின்கையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக வைத்திருந்த ஊசியை செவிலியர் எடுத்துள்ளார். அப்போது ஊசி உடைந்து கையில் சிக்கியதால், சஞ்சனாவின் கையில்வீக்கம் ஏற்பட்டுள்ளது. கணவர் புகார் அளித்த நிலையில் சஞ்சனாவை கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தகவல் தெரிவித்து 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆம்புலன்ஸ் வராததால் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர்.
இதுகுறித்து உதகை ‘பி1’ காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாரும், இருப்பிட மருத்துவ அதிகாரி ரவிசங்கரும் விசாரணை நடத்தினர்.
இருப்பிட மருத்துவ அதிகாரி மருத்துவர் ரவிசங்கர் கூறும்போது, ‘‘பெண்ணின் கையில் சிக்கியது ஊசி அல்ல, ஊசிக்கு மேல் பகுதியில் பயன்படுத்தப்படும் வென்சுவான் என்னும் 1 மி.மீ. அளவுள்ள பொருள். இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள கோவையில் உள்ள சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்கள், அங்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இதுகுறித்து எந்த அச்சமும் வேண்டாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT