Published : 07 Aug 2021 03:19 AM
Last Updated : 07 Aug 2021 03:19 AM
மன்னார்குடி மதுக்கூர் சாலையில் உள்ள குளத்தில் தண்ணீரின்றி புதர் மண்டியுள்ள நிலையில், சிலர் குப்பையைக் கொட்டி ஆக்கி ரமிக்க முயற்சிப்பதால், குளத் துக்கு நீர்வரத்து பாதை ஏற்படுத்தி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி மதுக்கூர் சாலையில் 6-ம் நம்பர் வாய்க்காலின் அருகில் பொதுப்பணித் துறைக்கு சொந்த மான குளம் உள்ளது. இந்தக் குளத்துக்கு தண்ணீர் வரத்துக்கான பாதையில்லாததால், கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீர் நிரப்பப் படாமல் உள்ளது.
மன்னார்குடி நகரத்தில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் பாய்கின்ற 6-ம் நம்பர் வாய்க்கால், இந்தக் குளத்தின் வலது கரையில் 3 மீட்டர் தொலைவிலேயே உள்ள நிலையில், இந்தக் குளத்தில் தண்ணீர் நிரப்ப அதிகாரிகள் முயற்சிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், புதர்கள் மண்டிய நிலையில் உள்ள அந்தக் குளத்தில், தற்போது குப்பையைக் கொட்டி ஆக்கிரமிக்க முயற்சி நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் கூறியது:
இந்தக் குளம் 6-ம் நம்பர் வாய்க்காலின் அகன்ற பகுதியாக இருந்தது. அதன்பின்னர், வாய்க் கால் ஒழுங்குபடுத்தப்பட்ட போது, நீரோட்டப் பாதையை ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டு, மற்றொரு பகுதியை குளமாக பொதுப்பணித் துறையினர் மாற்றிவிட்டனர்.
பின்னர், மீன் வளர்ப்பதற்காக தனியார் ஒருவரிடம் குளத்தை குத்தகைக்கு விட்டனர். ஆனால், இந்தக் குளத்துக்கு நீர்வரத்து பாதை மற்றும் வடிகால் ஏற்படுத்தாமல் விட்டுவிட்டதால், குளத்துக்கு நீர்வரத்தில்லாமல் போனது. இதனால், மீன்வளர்ப்பில் ஆர்வம் காட்டாத அந்த நபர், குளத்தையும் பராமரிக்காமல் விட்டுவிட்டார்.
இந்நிலையில்தான், பலர் குளத்தில் குப்பையைக் கொட்டி, ஆக்கிரமிக்க முயற்சித்து வரு கின்றனர். எனவே, இதில் உடன டியாக ஆட்சியர் தலையிட்டு, குளத்தை முழுமையாக ஆய்வு செய்து, 6-ம் நம்பர் வாய்க்காலில் பாய்கின்ற தண்ணீரை இந்தக் குளத்தில் நிரப்பும் வகையில் நீர்வரத்துப் பாதையை உருவாக்கி, உரிய வடிகால் வசதியையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தக் குளம் பயன்பாட்டுக்கு வந்தால், 6-ம் நம்பர் வாய்க்கால் பகுதியில் வசிக்கும் நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு பயனுள்ள குளமாக இது விளங்கும். தவிர, பொதுப்பணித் துறையினர் மீன் குத்தகைக்கு விட்டதற்கான நோக்கமும் நிறை வேறும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT