Published : 05 Aug 2021 03:17 AM
Last Updated : 05 Aug 2021 03:17 AM
திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டுமானம் மற்றும் பிற வசதிகள் தொடர்பாக, மத்திய அரசு அங்கீகாரச் சான்று வழங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையக் குழுவினர் நேற்று ஆய்வை தொடங்கினர்.
திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், 11.28 ஹெக்டேர் பரப்பளவில் ரூ. 336 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, தேசிய மருத்துவ ஆணையக் குழுவினர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான அங்கீகாரச்சான்றிதழ் வழங்குவது தொடர்பாக நேற்று ஆய்வைத் தொடங்கினர்.
இதில் தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் இருவர் பங்கேற்றுள்ளனர். மருத்துவக் கல்லூரி, குடியிருப்புப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேற்கொண்டு விரைவாக செய்ய வேண்டிய பணிகள் குறித்துஆய்வு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது ‘‘மருத்துவக் கல்லூரி கட்டிடம், ஆய்வகம், மருத்துவக் கல்லூரியில் உள்ள வசதிகள் தொடர்பாக ஆய்வில் கேட்டறியப்பட்டது. மருத்துவக் கல்லூரியில் உள்ள துறைகள், அவற்றில் பணியாற்ற உள்ளவர்களுக்கான இடங்கள் சரிபார்க்கப்பட்டன. மத்திய அரசு வழங்கும் அங்கீகார அனுமதிச் சான்று கடிதம் கிடைத்த பின்னரே, மருத்துவக் கல்லூரிக்கான அங்கீகாரம் கிடைக்கும். இரண்டு நாள் ஆய்வு நடக்கவுள்ளது’’ என்றனர்.
இதில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (மருத்துவக் கட்டிடங்கள் கோட்டம்) தவமணி மற்றும் மருத்துவமனைக் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT