Published : 02 Aug 2021 03:16 AM
Last Updated : 02 Aug 2021 03:16 AM
தமிழகம் முழுவதும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மாதிரி பேரூராட்சிகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக, 10 பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 528 பேரூராட்சிகள் உள்ளன. இதில் 12 சிறப்பு நிலை, 222 தேர்வு நிலை, 214 முதல் நிலை, 80 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் உள்ளன. இவை 17 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர்,தெருவிளக்கு, சாலை உட்கட்டமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் போன்றபணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியமாதிரி பேரூராட்சிகளை உருவாக்கதமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாங்காடு, பெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், கோத்தகிரி, சென்னிமலை, மாமல்லபுரம், பெருந்துறை, முசிறி, மண்ணச்சநல்லூர் ஆகிய 10 பேரூராட்சிகள் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பேரூராட்சி நிர்வாகங்கள் மூலம் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான பேரூராட்சிகளில் அனைத்து அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, பேரூராட்சி பகுதிகளை அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பகுதியாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 10 பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அப்பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். வீடு, வீடாகச் சென்று குப்பையை தரம் பிரித்து பெற்று உரம் தயாரிக்கப்படும். மழைநீர் வடிகால் அமைத்து, பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு, அனைத்து சாலைகளும் முறையாக அமைக்கப்படும். சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நடைபாதைகள் அமைக்கப்படும். மின் சிக்கனத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து தெருக்களிலும் எல்இடி தெருவிளக்கு அமைக்கப்படும். இறைச்சிக் கூடங்கள், மீன் அங்காடி போன்றவை அமைக்க தனியாக வசதி செய்யப்படும். பூங்காக்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். அரசின் நிலங்கள் பாதுகாக்கப்படும். இளைஞர்கள் விளையாட விளையாட்டு திடல்கள் அமைக்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட பேரூராட்சிகளில் என்ன வசதிகள் உள்ளன, எந்த வசதிகள் தேவை என்பதை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்து, அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கான சேவையை எளிமைப்படுத்தவும், துரிதப்படுத்தவும், அதிகளவு நகர்ப்புற திட்டங்களை பேரூராட்சிகளில் நடைமுறைப்படுத்தவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT