Published : 31 Jul 2021 03:13 AM
Last Updated : 31 Jul 2021 03:13 AM
நீலகிரி மாவட்டத்தில் அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத 2,394 பேருக்கு எழுத்தறிவு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு உதகை, கூடலூர், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் அடிப்படை கல்வியறிவு பெறாதவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் வாசிப்புத் திறன் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 மாதங்கள் அந்தந்த பகுதிகளிலுள்ள பயிற்சிமையங்களில் ‘கற்போம் எழுதுவோம்’ என்ற கோட்பாட்டின்படி, படிப்பறிவு இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பிறகு, கரோனா பரவலால் அவர்களுக்கு எழுத்தறிவு தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கரோனா பரவல் குறைந்துவிட்டதால், அவர்களுக்கான எழுத்தறிவு தேர்வு நேற்று நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் 163 மையங்களில் 2,394 பேருக்கு, 3 நாட்கள் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வு எழுதும் வகையில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மசினகுடி, மாவனல்லா, ஆனைகட்டி ஆகிய மையங்களில் நடைபெற்ற தேர்வுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசரூதின் நேற்று ஆய்வு செய்து கூறும்போது, "உதகையில் 699 பேர், குன்னூரில் 453, கோத்தகிரியில் 662, கூடலூரில் 580 என 2,394 பேருக்கு, சுழற்சி முறையில்3 நாட்கள் தேர்வுகள் நடைபெறுகின்றன. சிறப்பாக தேர்வு எழுதியவர்களுக்கு வட்டார வள மையம்மூலம் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்" என்றார்.
இதைத்தொடர்ந்து, ஆனைகட்டி பகுதியில் ஆன்லைன் மூலம்குழந்தைகள் பாடங்கள் படிப்பதை ஆய்வு செய்து, பாடம் தொடர்பாக அவர்களிடம் கேள்விகள் கேட்டார். வட்டார வள மைய ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT