Published : 31 Jul 2021 03:15 AM
Last Updated : 31 Jul 2021 03:15 AM
குழந்தைத் தொழிலாளர் முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். குழந்தைகளை யார் பணியில் அமர்த்தினாலும் தண்டிக்கப்படுவர் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்
திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்துக்குட்பட்ட புத்தக்குடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ.12.96 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஆட்சியர் சு.சிவராசு முன்னிலையில் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திறந்துவைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது:
பள்ளிகள் தற்போது செயல்படாத நிலையில், பெற்றோர்கள் வேலைக் குச் செல்லும்போது அவர்களது பிள்ளைகளும் வேலைக்குச் செல்வதாகத் தெரிகிறது. குழந்தைத் தொழிலாளர் முறையை ஊக்கு விக்கக்கூடாது என்றும், அதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளார்.
எனவே, குழந்தைகளை யார் பணியில் அமர்த்தினாலும் தண்டிக் கப்படுவர். அதேவேளையில், பள்ளியில் இருந்து இடைநின்று, வேலைக்குச் செல்லும் மாணவ- மாணவிகளைக் கணக்கெடுத்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் கல்வித் துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளி மாணவ- மாணவிகளில் 65 சதவீதம் பேர் ஆன்லைன் முறையில் கல்வி பெறுகின்றனர்.
சில இடங்களில் ஆசிரியர்கள் நேரில் சென்று குழுவாக மாணவ- மாணவிகளை அமரவைத்து வகுப்பு நடத்தி வருகின்றனர். சில கிராமங்களில் தொலைத்தொடர்பு வசதி மிகவும் குறைவாக உள்ளதால், மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, தொலைத்தொடர்பு சேவைக் குறைவாக உள்ள இடங்கள் குறித்த விவரங்களை அளித்தால், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
பள்ளிகளில் பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து மாணவ, மாணவிகள் புகார் அளிக்க புகார் பெட்டி வைக்கப்படவுள்ளது. புகார்களை அந்தப் பெட்டியிலோ அல்லது அரசின் இலவச உதவி மையத்தின் 14417 என்ற எண்ணிலோ தெரியப்படுத்தலாம். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடத் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.
மணப்பாறை எம்எல்ஏ பி.அப்துல் சமத், ரங்கம் கோட்டாட்சியர் சிந்துஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT