Published : 30 Jul 2021 03:17 AM
Last Updated : 30 Jul 2021 03:17 AM
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அடுத்த 2 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு கேட்கும் நிலை உருவாகும் என மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூரில் உள்ள செங்கழுநீர் ஏரியில் குறுங்காடு அமைக்கும் பணியை நேற்று தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை திறப்பது குறித்து ஏற்கெனவே துறை ரீதியாக ஆலோசனை செய்யப்பட்டது. தமிழக முதல்வரின் அறிவுறுத்தல்படி பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.
பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பிறகுதான் எங்கெங்கு காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற விவரம் தெரியவரும். அதை அடிப்படையாகக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்.அரசுப் பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் தரம் உயரத்தப்பட்டு, அரசுப் பள்ளிகளில் சேர சிபாரிசு கேட்கும் நிலை உருவாகும்.
அரசு பள்ளியில் உள்ள கழிப்பறைகளை துாய்மைப்படுத்த தனியாக பணியாளர்களை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக, குறுங்காடு அமைக்கும் பணியில் தஞ்சாவூர் ராமகிருஷ்ணன மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் தலைவர் செந்தூர்பாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT