Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM
கட்டித் தரப்பட்ட வீடுகளுக்கு பல லட்ச ரூபாய் செலுத்தியும் தனியார் கட்டுமான நிறுவனம் கிரயப் பத்திரம் வழங்கவி்ல்லை என்று, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் திருப்பூர் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு.வினீத் பங்கேற்று, குறைகளை கேட்டறிந்தார். பல்வேறு பகுதி பொதுமக்கள் நேரிலும் மனுக்கள் அளித்தனர்.
திருப்பூர் - காங்கயம் சாலை புதுப்பாளையம் டிகேஎஸ் நகர் பொதுமக்கள் கூறும்போது, "திருப்பூரில் உள்ள தனியார் வீட்டுமனை விற்பனை மற்றும் கட்டுமான நிறுவனம் கட்டித் தந்த வீடுகளில், 50 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இதில் ஒவ்வொருவரும் ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் தொடங்கி ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் வரை செலுத்தியுள்ளோம். வீட்டுக்கான மொத்த தொகையில், பாதி தொகை செலுத்தியபிறகு அனைவருக்கும் வீடு கிரயம் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், பலர் முழு தொகை செலுத்திய பிறகும், எந்தவித ஆவணமோ, கிரயப் பத்திரமோ கிடைக்கவில்லை.
பெரும்பாலானவர்கள் பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். சிறுக, சிறுக சேமித்த தொகையை வைத்து வீட்டை வாங்கினோம். தற்போது, கிரயப் பத்திரம் இல்லாததால், 7 ஆண்டுகளாக தனித்தனி மின் இணைப்பு, தண்ணீர் வசதி கிடைக்கவில்லை. 5 வீடுகளுக்கு ஒரே மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு என இருப்பதால், மாதம் ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. தனியார் நிறுவனத்திடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை. கிரயப் பத்திரத்தை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இழப்பீடு
மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் சி.பொன்னுசாமி கூறும்போது, "1982-ம் ஆண்டு பிஏபி பாசனத் திட்டம் பல்லடம் விரிவாக்கப் பகுதியில், பாசனக் கால்வாய்கள் வெட்டப்பட்டன. திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட ஆண்டிபாளையம், இடுவாய், மங்கலம், சாமளாபுரம், பூமலூர் ஆகிய பகுதிகளில் பிஏபி வாய்க்கால் அமைக்கப்பட்டது. அப்போது, அப்பகுதியில் இருந்த விவசாய நிலங்களை வாய்க்கால் அமைப்பதற்கு அரசு எடுத்துக்கொண்டது.இந்நிலையில், வாய்க்கால் பகுதிக்காக தங்கள் நிலப்பகுதியை இழந்த விவசாயிகள், அரசு எடுத்துக்கொண்ட நிலங்களுக்கு பலமுறை இழப்பீடு கோரியும் வழங்கப்படவில்லை. இழப்பீட்டுத்தொகையாக, தற்போதைய நிலமதிப்பின்படி விவசாயிகளுக்கு ரூ.5 கோடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT