Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM
திருச்செங்கோட்டில் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மற்றும் இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் தலைமை வகித்துப் பேசியதாவது:
குழந்தைத் திருமணம் செய்தல், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், ஏடிஎம் பின் நம்பர், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை கேட்டு யாராவது போன் செய்தாலோ, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் கேட்டாலும், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறினாலும், பணம் கொடுத்து வேலை வாங்கி தருவதாக கூறினாலும் 1098, 181 மற்றும் 155260 ஆகிய கட்டணமில்லா எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் வாட்ஸ் அப், யுடியுப்போன்றவற்றில் தவறாக புகைப்படங்களை சித்தரிப்பது போன்ற குற்றங்கள் நடந்தால் cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்தால் அதனை திருச்செங்கோடு உட்கோட்ட கண்காணிப்பாளர் வசம் 26-ம் தேதி (இன்று) மாலைக்குள் ஒப்படைத்து விட்டால் பெயர் முகவரி எதுவும் கேட்காமல் வழக்குப்பதிவு செய்யாமல் துப்பாக்கிகள் பெற்றுக்கொள்ளப்படும்.
அதன்பின் துப்பாக்கி இருப்பது தெரியவந்து பிடிபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மறைமுகமாக துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தால் 94454 37356 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் பல்வேறு குற்றங்களை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். குழந்தைகள் நல கமிட்டியின் தலைவர் கோகிலவாணி, உறுப்பினர் ராஜேந்திரன், திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி, லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT