Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

தஞ்சை கோட்டை அகழியில் நீர்த்தூம்பி கண்டுபிடிப்பு :

தஞ்சாவூர்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியில் உள்ள கோட்டை அகழியை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி.மாறன் மற்றும் சுவடியியல் ஆய்வாளர் கோ.ஜெயலட்சுமி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், மணி.மாறன் கூறியது:

தஞ்சாவூரில் கீழ, மேல, தெற்கு, வடக்கு அலங்கம் பகுதிகளில் மன்னர்களால் வெட்டப்பட்ட அகழி, தஞ்சாவூர் அரண்மனைக்கு பாதுகாப்பு கோட்டை அரணாக இருந்துள்ளது. இந்த அகழியின் தெற்கு அலங்கம் பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்ட நிலையில், மீதியுள்ள பகுதிகளில் இன்னும் ஓரளவுக்கு அகழியாகவே இருந்து வருகிறது.

தற்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அகழியை தூர் வாரி மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது, கொடிமரத்து மூலையை ஒட்டிய பகுதியில், செம்புறாங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ள அகழியின் கோட்டை கரை சுவரில், சதுர வடிவில் அமைந்த முக்காலடி அளவிலான நீர்த்தூம்பி கண்டறியப்பட்டுள்ளது.

அரண்மனையின் உட்புறங்களில் விழும் மழைநீரும், அங்குள்ள குளங்கள், கிணறுகளில் இருந்து வெளியேறக்கூடிய தண்ணீரும் அகழியில் சென்று சேருவதற்கான நிலத்தடியில் அமைந்திருந்த வழித்தடமே இந்நீர்வழித் தூம்பியாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x