Published : 24 Jul 2021 03:14 AM
Last Updated : 24 Jul 2021 03:14 AM

பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசைக் கண்டித்து - அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் :

திருச்சி/ தஞ்சாவூர்

பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி சிங்காரத்தோப்பு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தொழிற்சங்க மாவட்டச் செயலாளர்கள் ரங்கராஜன் (சிஐடியு), ஜோசப் நெல்சன் (தொமுச), சுரேஷ் (ஏஐடியுசி), வெங்கட்நாராயணன் (ஐஎன்டியுசி), தேசிகன் (ஏஐசிசிடியு), ஜான்சன் (எச்எம்எஸ்) ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பாதுகாப்புத் துறை உற்பத்தியை தனியாரிடம் வழங்கக் கூடாது. மின்சார சட்டத் திருத்தம், மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும். ரயில்வே, மின்சாரம், சுரங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் விமானம், துறைமுகம், காப்பீட்டு நிதி நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் ரங்கசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் அகஸ்டின், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். தொழிற்சங்க நிர்வாகிகள் குமார், செல்வராஜ், சண்முகம், ரங்கராஜ், கிருஷ்ணசாமி, கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் டி.தண்டபாணி, தொமுச மாவட்டத் தலைவர் மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் கு.சேவியர் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் தொடங்கி வைத்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் முடித்து வைத்தார். இதில், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் ஏ.ரவி, ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் கே.ராஜன், புஜதொமுச செயலாளர் ராவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டத் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டத் தலைவர் அங்காடி சேகர் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் தங்கமணி, ஹிந்துஸ்தான் மஸ்தூர் யூனியன் மாவட்டத் தலைவர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர்கள் குருசாமி, சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டத் தலைவர் வி.ஆர்.அண்ணாவேலு தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் என்.புண்ணீஸ்வரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x