Published : 20 Jul 2021 03:15 AM
Last Updated : 20 Jul 2021 03:15 AM

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் - 80,779 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்ச்சி :

திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 80,779 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. தேர்வுஇல்லாமல் மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண்களை நிர்ணயம் செய்து நேற்று வெளியிடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் 20,454 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 11,352 பேர் மாணவர்கள், 9,102 பேர் மாணவிகள். கடந்த கல்வியாண்டில் 63 பேர் பல்வேறு காரணங்களால் படிப்பை தொடர முடியாமல் மாற்று சான்றிதழ் வாங்கி சென்றதால் அவர்கள் தேர்ச்சி பட்டியலில் இடம்பெறவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் 9,053 மாணவர்கள், 10,999 மாணவியர் என மொத்தம் 20,052 பேர் பிளஸ் 2 தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் 47 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 140 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் படித்த 7,867 மாணவர்கள், 9,170 மாணவிகள் என மொத்தம் 17,037 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 12,050 மாணவியர், 11,186 மாணவர்கள் என, மொத்தம் 23,236 பேர்12-ம் வகுப்பு படித்தனர். இவர்கள்அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்மாவட்டத்தில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 74 மாணவ, மாணவிகளும், 550 முதல் 579 மதிப்பெண் வரை 1,287 மாணவ, மாணவிகளும் பெற்றுள்ளனர்.

வரும் 22-ம் தேதி முதல் மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 47 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 140 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x