Published : 18 Jul 2021 03:15 AM
Last Updated : 18 Jul 2021 03:15 AM
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உடல்நலக் குறைவால் ஆம்புலன்சில் வந்து வாக்களித்த 86 வயது மூதாட்டியிடம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நலம் விசாரித்தார்.
மதுரை ஆரப்பாளையம் டி.டி.சாலையில் வசித்தவர் ராஜாமணி அம்மாள்(86). முதுமை காரணமாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அப்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க அவர் விரும்பினார்.
இதையடுத்து ராஜாமணி அம்மாளை அவரது மகன் ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு ஆரப்பாளையம் தனியார் பள்ளி வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்தார். ராஜாமணி அம்மாளை அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள், அத்தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பாராட்டினர். இந்நிலையில் தற்போது நிதி அமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன் அந்த சம்பவத்தை மறக்காமல் எஸ்.எஸ்.காலனியில் வசிக்கும் ராஜாமணி அம்மாளை தன் குடும்பத்தினருடன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரிடம் பேசிய ராஜாமணி அம்மாள், அடுத்த தேர்தலிலும் வாக்களிப்பேன் என்றார்.
கடந்த தேர்தலின்போது மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்த பழனிசாமியின் (65) மனைவி காளியம்மாள் இறந்து விட்டார். மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்வதை ஒத்தி வைத்துவிட்டு, வாக்குச்சாவடிக்குச் சென்று பழனிசாமி வாக்களித்தார். மனைவி இறந்ததையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய பழனிசாமியை அமைச்சர் பாராட்டினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT